தெலுக் இந்தானில் 9 FRU வீரர்கள் உயிரிழப்புக்கு லோரியில் ஏற்றப்பட்ட அதிக எடையே காரணம்

கோலாலம்பூர், நவம்பர் 1 –
தெலுக் இந்தானில் கற்களை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று (FRU) எனப்படும் கூட்டரசு சேமப்படை லோரியுடன் மோதிய விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு லோரியின் ஏற்றப்பட்டிருந்த சரக்கு எடை அதன் சட்டப்பூர்வ சுமை வரம்பைவிட 70 விழுக்காட்டிற்கும் கூடுதலாக இருந்ததே காரணம் என போக்குவரத்து அமைச்சின் விசாரணையின் இறுதி அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அதிகப்படியான சுமை வாகனத்தை மெதுவாக்குவதையும் கட்டுப்படுத்துவதையும் கடினமாக்கியது, இதனால் வாகனத்தைத் தடுப்பதற்காக ஓட்டுநரின் அவசர நடவடிக்கையின்போது அது கட்டுப்பாட்டை இழந்தது.
மாறாக அந்த லோரியில் இயந்திரக் கோளாறு எதுவும் கண்டறியப்படவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 13 ஆம் தேதி பேரா,தெலுக் இந்தான் ஜாலான் Chikus – Sungai Lampam சாலையில் சிறு கற்களை ஏற்றிச் சென்ற லோரி FRU லோரியுடன் மோதிய விபத்தில் கூட்டரசு சேமப்படையைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்ததோடு மேலும் 9 பேர் காயம் அடைந்தனர்.
சரக்கு லோரி 40,960 கிலோகிராம் சரளைக் கற்களை ஏற்றிச் சென்றது, இது அனுமதிக்கப்பட்ட மொத்த வாகன எடையான 24,000 கிலோகிராம்களை விட 70.67 விழுக்காடு அதிகமாகும்.
அளவுக்கு மீறிய சுமை வாகனத்தின் இயக்க ஆற்றலை அதிகரித்ததால் , அதன் பிரேக்கின் திறன் மற்றும் நிலைத்தன்மையைக் குறைத்தது.
இதனால் அந்த வாகனம் தனது கட்டுப்பாட்டை இழப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த சரக்கு லோரியின் பிரேக் அல்லது Stering அமைப்புகளில் எந்தக் கோளாறுகளும் கண்டறியப்படவில்லை என விசாரணையில் தெரியவந்தது.
இதுதவிர அந்த லோரியின் GPS முறை செயல்படாததால் அதன் வேகமும் கண்காணிக்கப்படவில்லை.
அந்த லோரி ஓட்டுநர் செல்லுபடியாகும் CDL மற்றும் GDL உரிமங்களை வைத்திருந்த போதிலும். அவர் இதற்கு முன் போக்குவரத்து விதிகளை மீறியதற்கான 14 குற்றப்பதிவுகளை கொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டது.



