
கோலாலம்பூர், அக்டோபர்- 7 – தேசிய நல்லிணக்க ஆணையத்தை அமைக்கும் திட்டத்தைத் தொடர வேண்டாம் என அரசாங்கம் முடிவுச் செய்துள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இதனைத் தெரிவித்தார்.
பொது சமூக அமைப்புகள், அரசாங்க நிறுவனங்கள், கல்வியாளர்கள், சமூகத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் இரண்டு கலந்துரையாடல் அமர்வுகள் நடத்தப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
புதிய ஆணையத்தின் செயல்பாடுகள் தற்போதுள்ள அமைப்புகளின் பணிகளுடன் ஒன்றுடன் ஒன்று தொடர்புப்படுவதோடு, தேவையற்ற கூடுதல் செலவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
எனவே, புதிய ஆணையத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, ஏற்கனவே செயல்பட்டு வரும் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புத் துறை, ருங்குன் தெத்தாங்கா தொண்டூழியப் படை மற்றும் சமூக மத்தியஸ்தர்களின் பங்கை மேலும் வலுப்படுத்த அமைச்சு முடிவுச் செய்துள்ளதாக அமைச்சர் விளக்கினார்.
தேசிய நல்லிணக்க ஆணையத்தை அமைக்கும் பரிந்துரை கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நாட்டின் சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஒற்றுமை தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அப்போது அப்பரிந்துரை மீண்டும் முன்வைக்கப்பட்டது.
எனினும், தற்போதுள்ள அமைப்புகளை வலுப்படுத்துவதே சமூக நல்லிணக்கத்தை நிர்வகிக்க மிகவும் நடைமுறை, விரைவான மற்றும் செலவு குறைந்த அணுகுமுறை என அரசாங்கம் முடிவுச் செய்துள்ளது.



