
கோலாலம்பூர், அக்டோபர்-7 – நாட்டில் இதுவரை மொத்தம் 40.77 மில்லியன் வாகனங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 26.6 மில்லியன் அல்லது 65.3 விழுக்காடு வாகனங்கள் இன்னமும் _active_ அதாவது பயன்பாட்டில் இருப்பதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த 26 மில்லியன் வாகனங்களில் சுமார் 16 மில்லியன் கார்களாகும்; 9.57 மில்லியன் மோட்டர் சைக்கிள்கள் என, மக்களவைக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சுக் கூறியது.
நாட்டில் பதிவுச் செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சாலைகளில் உண்மையில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையைப் புரிந்துகொள்ள, _active_ மற்றும் _inactive_ வாகனங்களுக்கிடையிலான வேறுபாட்டைக் கவனத்தில் கொள்வது முக்கியம் எனவும் அமைச்சுக் கூறியது.
பதிவுச் செய்யப்பட்ட மொத்த வாகன எண்ணிக்கையில், நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாத அல்லது உரிமம் புதுப்பிக்கப்படாத வாகனங்களும் இடம்பெற்றுள்ளன; எனவே 40.77 மில்லியன் வாகனங்களும் தற்போது சாலைகளில் ஓடுகின்றன என பொருள்படாது.
இதன்படி, பதிவுச் செய்யப்பட்ட வாகனங்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே தற்போது _active_ நிலையில் உள்ளதாக அமைச்சு விளக்கியது.



