தைப்பிங் சிறை சித்ரவதை விவகாரத்தில் விசாரணை நடத்த பி.கே.ஆர் சிவமலர் அவசர கோரிக்கை

கோலாலாம்பூர், மே-27,
பேராக், தைப்பிங் சிறைச்சாலையில் கைதிகள் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மலேசிய மனித உரிமைகள் ஆணையமான SUHAKAM வெளியிட்டுள்ள புலனாய்வு அறிக்கை மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக, பி.கே.ஆர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு ஜனவரி 17-ஆம் தேதி, தைப்பிங் சிறையின் Hall B பிரிவிலிருந்து Block E பிரிவுக்கு மாற்றப்பட்ட போது, நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் 60 சிறைக்காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
இதில் Gan Chin Eng என்ற கைதி பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்தப் பிரிவு பாதுகாப்பற்றது என்று தெரிந்தும் சிறை நிர்வாகம் இந்த இடமாற்றத்தை நடத்தியுள்ளது SUHAKAM விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதுகுறித்து அதிரடி அறிக்கை விடுத்துள்ள சிவமலர், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 5-ன் கீழ் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வுரிமை உண்டு என்றும், கைதிகளாக இருந்தாலும் அவர்களின் மனிதநேயமும் பாதுகாப்பும் உறுதிச் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பொய்யான அறிக்கைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை மறைக்கும் கலாச்சாரத்தை மடானி அரசாங்கம் சகித்துக் கொள்ளாது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக ஒரு சுதந்திரமான, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்; நீதியும் மனித உரிமைகளும் சிறைச்சாலை வாசல்களோடு நின்றுவிடக் கூடாது என்றார் அவர்.
தைப்பிங் சிறை தகுதியற்ற நிலையில் இருப்பதாகவும், எனவே அதனைப் பேசாமல் அருங்காட்சியகமாக மாற்றி விடவும் SUHAKAM பரிந்துரைத்துள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது.



