ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-22, சென்னை வழியாக மதுரையிலிருந்து பினாங்கிற்கான IndiGo விமான நிறுவனத்தின் முதல் நேரடிப் பயணச் சேவை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் சென்னை அனைத்துலக விமான நிலையத்திலிருந்து 165 பயணிகளுடன் புறப்பட்ட IndiGo 6E 1045 விமானம், மலேசிய நேரப்படி சனிக்கிழமை காலை 8.08 மணிக்கு பினாங்கில் தரையிறங்கியது.
பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய அவ்விமானத்துக்கு, பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்சியடித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.
சுற்றுலா மற்றும் படைப்பாக்க பொருளாதாரத் துறைக்கான பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வோங் ஹோன் வாய் (Wong Hon Wai), சென்னையிலிருந்து வந்திறங்கிய முதல் பயணிகள் குழுவினரை எதிர்கொண்டு வரவேற்றார்.
பின்னர் பினாங்கிலிருந்து சென்னைக்கான 6E 1046 நேரடி விமானம் காலையில் புறப்பட்டு, இந்திய நேரப்படி காலை 10.35 மணிக்கு சென்னை சென்றடைந்தது.
சென்னையும் பினாங்கும் ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்புகளைக் கொண்டுள்ளன.
இந்நிலையில், அவ்விரு நகரங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்திச் செய்யும் வகையில், இப்புதிய நேரடி விமானச் சேவை அறிமுகம் கண்டுள்ளது.
பினாங்கு சுற்றுலா துறை வளர்ச்சிக்கு இது கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருமென வோங் ஹோன் வாய் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஏற்கனவே சென்னை – கோலாலம்பூர் மற்றும் சென்னை – லங்காவி என இரு நேரடி பயணச் சேவைகளை வழங்கி வரும் IndiGo, மலேசியாவில் மூன்றாவது இடமாக பினாங்கைத் தேர்ந்தெடுத்துள்ளது.