
கோலாலம்பூர், நவம்பர்-12,முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தனது வீட்டுக் காவலைத் தொடங்கியுள்ள நிலையில், அவரது வீட்டின் பாதுகாப்புக்கு சிறைச்சாலை இலாகாவே முழுப் பொறுப்பு வகிப்பதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
என்றாலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிச் செய்ய போலீஸ் படையும் சிறைச்சாலை இலாகாவுடன் நெருக்கமாக ஒத்துழைக்கும் என அவர் கூறினார்.
கோலாலம்பூர், லங்காக் டூத்தாவில் உள்ள நஜீப்பின் வீடு செந்தூல் மாவட்டப் போலீஸின் அதிகார வரம்புக்குள் வருகிறது.
எனவே, அவ்வப்போது சோதனைகளையும் பாதுகாப்புக் கண்காணிப்பையும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக IGP தெரிவித்தார்.
மேலும், சிறைச்சாலை இலாகாவுக்கு உதவ சில போலீஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாமன்னர் தலைமையிலான கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப, SRC International வழக்கில் எஞ்சியுள்ள சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நஜீப் நவம்பர் 10-ஆம் தேதி முதல் தனது இல்லத்தில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
அவரது வீட்டுக் காவல் 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை தொடரும்.



