கோலாலம்பூர், ஜூலை-25 – அரசாங்கத்தின் புதியக் கடன்களின் அளவு, 2021, 2022-ஆம் ஆண்டுகளில் இருந்ததை விட கடந்த ஈராண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது.
2022-ல் 100 பில்லியனாக இருந்த கடனை, கடந்தாண்டு 93 பில்லியனுக்குக் குறைத்தோம்; இவ்வாண்டு 86 பில்லியனாக அது குறைந்திருக்கின்றது.
நாட்டின் மொத்தக் கடனைக் குறைக்க தமது தலைமையிலான அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டை அது பிரதிபலிப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
எனவே, நாட்டின் கடனைக் குறைக்கும் வாக்குறுதியை அரசாங்கம் காப்பாற்றவில்லை எனக் கூறுவோர், அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் என பிரதமர் சாடினார்.
புள்ளிவிவரங்கள் தெரியாமல், உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமூக ஊடகங்களில் பரவ விடுவது அவர்களின் வாடிக்கையாகி விட்டதென அன்வார் மேலும் சொன்னார்.
என்றாலும், முந்தையை அரசாங்கங்கள் விட்டுச் சென்ற எல்லா கடன்களையும் நடப்பு அரசாங்கம் தன் இஷ்டத்துக்கு ரத்துச் செய்ய முடியாது என்பதையும் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.
அவ்வாறு செய்திட்டால், புதியப் பள்ளிகளைக் கட்டுவது, பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பது போன்ற மக்கள் நலத் திட்டங்கள் பாதிப்படையுமென்றார் அவர்.
நாட்டின் கடன் சுமை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (KDNK) 64 விழுக்காடாக இருப்பதால், உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுப்பது பெரும் பாடாகும்.
எனவேதான் 64 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காட்டுக்கு அதனைப் படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது என பிரதமர் கூறினார்.
நாட்டின் மொத்தக் கடன் தற்போது 1.5 ட்ரிலியனாக உள்ளது குறிப்பிடத்தக்கது.