Latestமலேசியா

நாட்டில் ஆட்டிசம் பதிவுகள் 23.51% உயர்வு: மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை தீர்க்கப்பட வேண்டும் – லிங்கேஸ்வரன் கோரிக்கை

கோலாலாம்பூர், ஜூலை-31 – நாட்டில் ஆட்டிசம் பாதிப்புடையவர்களின் பதிவு வெகுவாக அதிகரித்து வரும் வேளையில், தகுந்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் சிகிச்சை அதிகாரிகளின் கடுமையான பற்றாக்குறையை அரசாங்கம் உடனடியாகத் தீர்க்க வேண்டும் என, செனட்டர் Dr லிங்கேஸ்வரன் ஆர் அருணாச்சலம் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற மேலவையில் லிங்கேஷ்வரன் எழுப்பியக் கேள்விக்கு, மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு அளித்த வாய்மொழி பதிலின்படி, கடந்த ஜூன் 2026 நிலவரப்படி, 93,000-க்கும் மேற்பட்ட ஆட்டிசம் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது கடந்தாண்டு ஜூன் மாத்தோடு ஒப்பிடுகையில், 23.5 விழுக்காடு என்ற அதிர்ச்சிகரமான உயர்வாகும்.

பாலர் பள்ளிப் பருவத்திலேயே கட்டாயச் பரிசோதனைகள் மூலம் புதியச் சம்பவங்கள் விரைவாகக் கண்டறியப்பட்டாலும், பொது சுகாதாரக் கட்டமைப்பு பெரும் சவாலைச் சந்தித்து வருவதாக லிங்கேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.

இதர பேச்சு மற்றும் மறுவாழ்வு சிகிச்சைகளைப் பெற பெற்றோர்கள் 6 முதல் 9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை நீடிக்கிறது.

நாடு முழுவதிலும் உள்ள சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளில், குழந்தைகள் வளர்ச்சி தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் வெறும் 14 பேர் மட்டுமே உள்ளனர்.

2 முதல் 6 வயது வரையிலான காலக்கட்டம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ‘பொன்னான காலம்’ என்பதால், இத்தகைய தாமதங்கள் அவர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதாக அவர் எச்சரித்தார்.

எனவே, சிகிச்சை அதிகாரிகளின் நியமனங்களை விரைவுபடுத்துவதோடு, B40 மற்றும் M40 குடும்பங்களுக்குச் சிறப்புச் சிகிச்சை மானிய பற்றுச் சீட்டுகளை அரசாங்கம் வழங்க வேண்டும்;

தவிர, அக்டோபரில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2027 வரவு செலவுத் திட்டத்தில் இதற்கு முக்கியத்துவம் அளித்தல் போன்ற அவசர நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த எண்ணிக்கை உயர்வானது ஒரு தெளிவான எச்சரிக்கை மணி என்றும், சுகாதாரக் கட்டமைப்பு முற்றிலும் முடங்குவதற்கு முன் அமைச்சு மட்டத்திலான ஒருங்கிணைந்த நடவடிக்கை உடனடியாகத் தேவை என, அறிக்கை வாயிலாக Dr லிங்கேஸ்வரன் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!