கோலாலம்பூர், ஏப் 17 – ம.இ.காவின் தேசிய தலைவராக தாம் இருக்கும்வரை கட்சியின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன்தான். இதில் எந்தவொரு மாற்றமும் இல்லையென்று உறுதியளிப்பதாக டான்ஸ்ரீ S.A விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று நடைபெற்ற ம.இகா மத்திய செயலவை கூட்டத்தில் ம.இ.காவில் தேசிய துணைத் தலைவர் , தேசிய உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள், தேசிய இளைஞர் பிரிவு , தேசிய மகளிர் பிரிவு , புத்ரா ,புத்ரி மற்றும் டிவிசன் தலைவர்களுக்கான தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். அதே வேளையில் கட்சியின் தேசிய துணைத்தலைவராக சரவணன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணணை எதிர்த்து போட்டியிடுபவர்கள் தாராளமாக போட்டியிடலாம் என இன்று நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசியபோது விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தேசிய துணைத்தலைவர், மூன்று உதவித் தலைவர்கள் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜூன் 22ஆம் தேதி நடைபெறும். இரண்டு வார கால பிரச்சாரத்திற்கு பின் ஜூலை 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் தேசிய துணைத் தலைவர் , உதவித் தலைவர்கள் மற்றும் மத்திய செயலவைக்கான தேர்தல் நடைபெறும் என என்ற விவரங்களையும் விக்னேஸ்வரன் வெளியிட்டார். நாடு தழுவிய நிலையில் தொகுதி நிலையிலான ம.இ.கா இளைஞர், மகளிர் ,புத்ரா மற்றும் புத்ரி ஆகியவற்றுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 27 ஆம் தேதியும் இதற்கான தேர்தல் மே மாதம் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெறும்.
தொகுதி தலைவர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் மே மாதம் 10, 11 மற்றும் 12 ஆம்தேதிகளில் நடைபெறும். தொகுதி தலைவர்களுக்கான தேர்தல் மே மாதம் 17, 18 மற்றும் 19 ஆம்தேதி நடைபெறும். ம.இ.கா தேசிய இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி ஆகியவற்றுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜூன் 8 ஆம் தேதி நடைபெறும் வேளையில் ஜூன் 15ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் விக்னேஸ்வரன் அறிவித்தார்.