
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 25 – பெரிக்காத்தான் நேஷனல் ஏற்பாட்டில் பிரதமர் அன்வார் பதவி விலக வேண்டும் என கோரி நாளை சனிக்கிழமை நடைப்பெற திட்டமிடப்பட்டுள்ள பேரணியின் போது, பேங்க் நெகாரா மலேசியா மற்றும் கோலாலம்பூர் ரயில் நிலையங்களில் இரயில் நிற்காது என பரவி வரும் அறிவிப்பை மறுத்துள்ளது KTMB நிறுவனம்.
வைரலான அந்த அறிவிப்பில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் சம்பந்தப்பட்ட அந்த இரு நிலையங்களும் மூடப்படும் என்றும், இரயில்கள் அங்கு நிற்காது என்றும் போடப்பட்டிருக்கிறது.
இதனிடையே, அது போலி என்றும் KTMBயின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களின் வழி பகிரப்படும் செய்திகளையும் தகவல்களையும் மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டுமென்றும் அது பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த பேரணியின் போது, பங்கேற்பாளர்கள் Masjid Negara, Pasar Seni,Masjid Jamek Sultan Abdul Samad, Masjid Jamek Kampung Baru மற்றும் சோகோ ஷாப்பிங் வளாகத்தில் கூடி, பின்னர் டத்தாரான் மெர்டேகாவிற்கு அணிவகுத்துச் செல்வார்கள் என்று அறியப்படுகின்றது.
இந்நிலையில் பேரணியில் கலந்துகொள்பவர்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து அமைதியாக ஒன்றுக்கூட வேண்டுமென்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.