Latestமலேசியா

நியாயமற்ற பணிநீக்கம் ; 17 முன்னாள் விரிவுரையாளர்களுக்கு 1.4 மில்லியன் இழப்பீடு வழங்க தொழில்துறை நீதிமன்றம் உத்தரவு

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 15 – அநியாயமாக பணிநீக்கம் செய்யப்பட்ட 17 விரிவுரையாளர்களுக்கு சுமார் 1.4 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க, தனியார் கல்லூரி ஒன்றுக்கு, தொழில்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட விரிவுரையாளர்களின் பணி ஒன்றோடு ஒன்று முரண்பட்டிருப்பதாகவும், பொதுப் பணி நீக்கம் என்ற கொள்கையின் அடிப்படையில் அவர்கள் தேர்வுச் செய்யப்பட்டதாகவும், விடாட் (Widad) கல்லூரி முன்வைத்துள்ள வாதத்தில் நம்பிக்கை இல்லை என தொழில்துறை நீதிமன்ற தலைவர் நூர் பெளசா மொக்தார் (Nur Fauzah Mokhtar) தெரிவித்தார்.

அதோடு, பணிநீக்கத்தை தவிர்க்க, பெரிய அளவில் நடவடிக்கை மற்றும் நிர்வாக செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறப்படுவதை, விடாட் பல்கலைக்கழகம் மற்றும் விடாட் கல்லூரிகளை நிர்வகித்து வரும் விடாட் கல்வி நிறுவனம் நிரூபிக்க தவறி விட்டதாகவும், அவர் சொன்னார்.

திடீரென விரிவுரையாளர்களின் சேவையை முடிவுக்கு கொண்டு வந்த நடவடிக்கை, நல்ல எண்ணத்தோடு செய்யப்படவில்லை. அதனால், சம்பந்தப்பட்ட விரிவுரையளர்களுக்கு விடாட் நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

முன்னதாக, செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட விரிவுரையாளர்களை, மூன்று மாத நோட்டீசுக்கு பின்னர், 2021-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி, விடாட் நிர்வாகம் பணிநீக்கம் செய்தது.

அவர்களுக்கு 51 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரிங்கிட் வரை இழப்பீடு வழங்கப்பட்டது.

எனினும், முதலில் சம்பளம் இல்லாத விடுப்பில் செல்ல தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், பின்னர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறி, சம்பந்தப்பட்ட விரிவுரையாளர்கள் வழக்கு தொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!