
ஷா ஆலாம், ஜூலை-17- நாட்டின் நீதித்துறை நியமனங்கள் தொடர்பாக யூகமான அல்லது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைத் தவிர்க்குமாறு, சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா (Sultan Sharafuddin Idris Shah), அனைவரையும் வலியுறுத்தியுள்ளார்.
முழுமையான மற்றும் சரிபார்க்கப்பட்ட தகவல்கள் இல்லாமல் யூகங்கள் அடிப்படையில் பேசுவதும் செயலாற்றுவதும் சரியல்ல; சட்ட அமைப்பின் நெறிமுறையைப் பாதுகாக்க, இதுபோன்ற விஷயங்களை கவனமாகவும் உண்மைகளின் அடிப்படையிலுமே கையாள வேண்டும் என, நேற்று நிறைவடைந்த மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் 269-ஆவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவருமான சுல்தான் ஷாராஃபுடின் நினைவுறுத்தினார்.
அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களில் நாட்டின் தலைமை நீதிபதி, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் உள்ளிட்ட முக்கிய நீதிபதிகளின் நியமனங்களும் அடங்கும்.
சட்ட விதிகளை, குறிப்பாக முக்கிய நீதிபதிகளை நியமிப்பதற்கான நடைமுறையை கோடிட்டுக் காட்டும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை, அக்கூட்டத்தில் தாம் வலியுறுத்தியதாகவும் அவர் சொன்னார்.
பிரதமரின் ஆலோசனையின் பேரில், பேரரசர், ஆட்சியாளர்கள் மன்றத்துடன் கலந்தாலோசித்த பிறகு முக்கிய நீதிபதிகளை நியமிக்கலாமென, ஜூலை 10-ஆன் தேதி இஸ்தானா நெகாரா வெளியிட்ட அறிக்கைக்கும் சுல்தான் ஷாராஃபுடின் முழு ஆதரவைத் தெரிவித்தார்.
நீதிபதிகள் நியமனத்தில் தலையீடுகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், இரண்டொரு நாட்களில் நீதித்துறையின் முக்கியப் பதவிகளுக்கான நியமனங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.