
புத்ராஜெயா – ஜூலை-15 – நீதிபதிகளின் தவறுகள் அல்லது நடத்தை குறித்த புகார்களை விசாரிக்க, மாமன்னர் சிறப்பு நடுவர் மன்றத்தை அமைக்கலாம்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் மாமன்னருக்கு அந்த உரிமை வழங்கப்பட்டிருப்பதாக, சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலீனா ஒத்மான் சாயிட் தெரிவித்தார்.
அப்படி நடுவர் மன்றத்தின் விசாரணைக்கு ஆளாகும் நீதிபதிகளை, நாட்டின் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து பிரதமர் கொடுக்கும் அறிவுரையின் பேரில், மாமன்னர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய முடியும்.
அதே சமயம், பணியில் நெறிமுறைத் தவறும் நீதிபதிகள் குறித்து, நீதித் துறை நெறிமுறை செயற்குழுவிடம், நாட்டின் தலைமை நீதிபதி புகார் அளிக்கலாம், என அசாலீனா கூறினார்.
2009-ஆம் ஆண்டு நீதிபதிகள் நெறிமுறை கோட்பாடுகள் நடைமுறையில் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
நீதி பரிபாலனத் துறை, எந்தவோர் அரசியல் அல்லது வெளியாரின் தலையீடுகளிலிருந்தும் விடுபட்டிருப்பதை உறுதிச் செய்வதே அக்கோட்பாடுகளின் நோக்கமாகும்.
நீதித் துறையின் சுதந்திரத்தை வலியுறுத்தி மலேசிய வழக்கறிஞர் மன்றம் நேற்று புத்ராஜெயாவில் அமைதி ஊர்வலம் நடத்தியது குறித்து அமைச்சர் கருத்துரைத்தார்.
வழக்கறிஞர் மன்றம் உள்ளிட்ட எல்லா தரப்புகளின் கருத்துகளையும் கேட்க அரசாங்கம் எப்போது தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.
காலியாக உள்ள முக்கிய நீதிபதிகள் பொறுப்புகளை உடனடியாக நிரப்புவது, நீதிபதிகள் நியமனத்தில் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் புகார்களை விசாரிக்க, அரச விசாரணை ஆணையத்தை அமைப்பது உள்ளிட்ட 4 கோரிக்களை வலியுறுத்தி வழக்கறிஞர் மன்றம் நேற்று பிரதமர் துறையில் மகஜர் சமர்ப்பித்தது.