ஜெலெபு, ஜூலை-9 – வியாபாரிகள் கூறுவது போல் நெகிரி செம்பிலானில் ஐஸ் கட்டி விலையேற்றம் எதுவும் இல்லை!
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் (KPDN) மாநிலக் கிளையின் இயக்குநர் சாஹிட் மஸ்லான் (Zahir Mazlan) அதனை உறுதிபடுத்தியுள்ளார்.
ஐஸ் கட்டிகளின் விலை 30 சென் அதிகரித்திருப்பதாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து சிரம்பானில் உள்ள ஐஸ் கட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் சோதனை மேற்கொண்டோம்; ஆனால் விலையேற்றம் எதுவும் கண்டறியப்படவில்லை.
15 கிலோ கிராம் ஐஸ் கட்டி மூட்டை 3 ரிங்கிட்டில் இருந்து 3 ரிங்கிட் 15 சென் என்ற பழைய விலையிலேயே விற்கப்படுவதாக சாஹிர் சொன்னார்.
விலையேற்றம் காணவிருப்பதாக இதுவரை அறிவிப்பு எதனையும் அத்தொழிற்சாலை வெளியிடவும் இல்லையென்றார் அவர்.
இந்நிலையில், நியாயமான காரணங்களின்றி ஐஸ் கட்டி விலையை உயர்த்தக் கூடாது என தொழிற்சாலைகளுக்கு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு முன் 4 ரிங்கிட்டாக இருந்த ஐஸ் கட்டி விலை திடீரென 4 ரிங்கிட் 30 சென்னாக உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் சிலர் முன்னதாக சமூக ஊடகங்களில் கொந்தளித்தனர்.
குவாலா கிளாவாங்கைச் (Kuala Klawang) சேர்ந்த Mohd எனும் வியாபாரி, முன்னதாக் 3 ரிங்கிட் 80 சென்னாக இருந்த ஐஸ் கட்டி 20 சென் விலையேற்றம் கண்டு, இப்போது மேலும் 30 சென் உயர்வுக் கண்டிருப்பதாக புகார் கூறியிருந்தார்.