பட்டர்வொர்த், மே 14 – பினாங்கு, பட்டர்வொர்த்தில், போதைப் பொருளை உட்கொண்ட மயக்கத்தில், அந்நிய நாட்டு ஆடவர் ஒருவர் தாக்கி விட்டு தப்பியோட முயன்ற உள்நாட்டு ஆடவன் ஒருவனை, 20 கிலோமீட்டர் தூரம் வரை துரத்திச் சென்று போலீசார் வளைத்துப் பிடித்தனர்.
முன்னதாக, தப்பி ஓட முயன்ற கருப்பு நிற கார் ஒன்றை, மூன்று போலீஸ் வாகனங்கள் துரத்திச் செல்வதை காட்டும் 30 வினாடி காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.
நேற்று மாலை மணி 3.30 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
புக்கிட் மெர்தாஜாமுலுள்ள, அல்மா வர்த்தக மையத்தில், அந்நிய நாட்டு ஆடவர் ஒருவரை அடித்ததாக நம்பப்படும் அந்த 40 வயது ஆடவனை போலீசார் கைதுச் செய்ய சென்ற போது, அவன் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்காமல், காரில் ஏறி தப்பிச் செல்ல முயன்றுள்ளான்.
அவனை துரத்திச் சென்ற போலீசார், சுங்கை நியோர் டோல் சாவடியில் வளைத்துப் பிடித்தனர்.
எனினும், பிடிபடுவதற்கு முன், அவன் மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவரை மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.
அவ்வாடவனின் காரை சோதனையிட்டதில், அதில் போதைப் பொருளை உட்கொள்ள ஏதுவாக மாற்றி அமைக்கப்பட்ட போத்தல் ஒன்று கண்டெடுக்கப்பட்ட வேளை ; அவ்வாடவனுக்கு எதிராக போதைப் பொருள் தொடர்பான மூன்று பழையை குற்றப்பதிவுகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
குற்றவியல் சட்டம், அபாயகர போதைப் பொருள் சட்டம் மற்றும் போக்குவரத்து சட்டங்களின் கீழ், விசாரணைக்காக அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.