ஷா அலாம், ஆக 11 – Bandaraya Fish எனப்படும் Suckermouth catfish மீன்களை பிடிக்கும் ஆர்வலர்கள் ஒவ்வொரு கிலோவுக்கும் ஒரு ரிங்கிட் வழங்குவதற்கு சிலாங்கூர் அரசாங்கம் முன்வந்துள்ளது. செப்டம்பர் முதல் தேதியிலிருந்து அக்டோபர் முதல் தேதிவரை , சிலாங்கூர் நீர்நிலைகளில் பிடிக்கப்படும் இந்த மீன்களை வெகுமதிக்கு ஈடாக குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு வரலாம் என்று சிலாங்கூர் மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ( Amiruddin Shari ) கூறினார். இந்த ஆக்கிரமிப்பு இனவகை மீன்கள் கிட்டத்தட்ட அனைத்து ஆறுகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஏரிகள் மற்றும் சுரங்க குளங்களில் படையெடுத்துள்ளன.
இந்த மீன்கள் தற்போதுள்ள சுற்றுச்சூழல் அமைப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதோடு நம் நாட்டின் மீன் இனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. பாண்டன் பெர்டானாவில் (Pandan Perdana) மாநில அளவிலான உலக நீர் தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டபோது அமிருடின் ஷாரி இதனைத் தெரிவித்தார். இந்த மீன்களை பிடிப்பவர்கள் அவற்றை ஒப்படைக்கும் இடங்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என மாநில அடிப்படை வசதிகள் மற்றும் விவசாய குழுவின் தலைவரான Izham Hashim கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மீன்வளத் துறை 1.11 மில்லியனுக்கும் அதிகமான மீன்கள் மற்றும் இதர நிர்வாழ் உயிரினங்கள் ஆறுகளில் விட்டுள்ளதாக கூறப்பட்டது. இதுவரை, இந்த ஆண்டு நான்கு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக 218,000 இறால்கள் மற்றும் Ikan lampam மீன்கள் ஆறுகளில் விடப்பட்டுள்ளன.