
குவாந்தான், செப்-16-பஹாங், Tasek Bera பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமலாக்க அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் ஐவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
செப்டம்பர் 15-ஆம் தேதி காலை 10 மணியளவில், தேசிய வனச் சட்டம் 1984-ன் கீழ் வனத்துறை, Bera மாவட்ட மற்றும் நில அலுவலகம், பொது நடவடிக்கைப் படை ஆகியவை இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது அச்சம்பவம் நிகழ்ந்ததாக Bera மாவட்ட காவல் துறைத் தலைவர் Superintendan Zulkiflee Nazir தெரிவித்தார்.
அமலாக்கக் குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்த போது, குழுவாக வந்த சிலர் தடுப்புகளை ஏற்படுத்தி அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன், ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் கூறினார். அதனை அடுத்து, 30 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரும் நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 186-ன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சரிபார்க்கப்படாத செய்திகள் அல்லது பொய்யான தகவல்களைப் பரப்பி, பொது அமைதிக்கு ஊறு விளைவிக்க வேண்டாம் என Zulkiflee பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார். அச்சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி அதற்கு பல கருத்துகள் பதிவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



