பிணைப் பணம் பெறும் நோக்கில் சீன நாட்டு ஆடவரைக் கடத்தியதாக, கணவன் மனைவி மற்றும் இதர நால்வர் மீது சிலாங்கூர், செப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த மாதம் நிகழ்ந்த அச்சம்பவத்தில், கிரிப்தோ நாணய வடிவில் 44 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட்டை அந்த அறுவரும் பிணைப் பணமாகக் கேட்டிருக்கின்றனர்.
இன்னும் வெளியிலிருக்கும் மேலும் நால்வருடன் இணைந்து, ஜூலை 11-ஆம் தேதி காலை 11 மணிக்கு, சைபர்ஜெயா அருகே MEX நெடுஞ்சாலையில், அவ்வாடவரை கடத்தியதாக அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கினர்.
எனினும், அறுவரும் குற்றத்தை மறுத்து விசாரணைக் கோரினர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30-திலிருந்து 40 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படலாம்.
குற்றஞ்சாட்டப்பட்ட அறுவருக்கும் நீதிபதி ஜாமீன் மறுத்தார்.
போலீசாரால் தேடப்படும் மேலும் நால்வர், அந்த சீன பிரஜையைக் கடத்திய 18 பேர் கொண்ட பெரிய கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அந்நால்வரும் இன்னமும் இந்நாட்டுக்குள் இருப்பதாகவே போலீஸ் நம்புகிறது.
அக்கடத்தல் தொடர்பில் ஆகஸ்ட் 3-ம் தேதி ஜோகூர், ஸ்கூடாயில் இரு வேறு இடங்களில் வைத்து 4 குற்றவாளிகளை போலீஸ் சுட்டுக் கொன்றது.