
பட்டர்வெர்த், மே 6 – 63 வயது ஆடவரை கொலை செய்ததாக 70 வயது முதியவர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. நீதிபதி நோர் அஷா கஸ்ரான் ( Nor Azah Kasran ) முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக 70 வயதுடைய யீ பாட் சியோங் (Yee Fat Seong) தலையசைத்தார்.
இந்த குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருப்பதால் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை மணி 3.32 வரை செபெராங் பிறை தெங்காவில், ஜாலான் Kolam Tengah வில் ஓய்வு குடிலில் லோ ஆ தியோங் ( Loo Ah Teong ) என்பவரை கொலை செய்ததாக யீ மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் குறைந்த பட்சம் 30 ஆண்டுகள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் 40 ஆண்டுகள்வரை சிறை மற்றும் 12 பிரம்படி விதிக்கப்படும் தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் 30 ஆம்தேதியன்று மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும். கொலையுண்ட ஆடவரை கத்தியால் குத்துவதற்கு முன் கட்டையினால் யீ குத்தியதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.