
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19- கோலாலம்பூர், Brickfieldsசில் நடத்தப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில், சுமார் 80 கிலோ மெத்தாம்பேட்டமைன் (methamphetamine) மற்றும் 30 கிலோ எக்ஸ்டசி (ecstasy) ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றினர். அவற்றின் மொத்த மதிப்பு 8.3 மில்லியன் ரிங்கிட் ஆகும். அந்நடவடிக்கையின் போது 36 வயதுடைய வெளிநாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் Datuk Fadil Marsus தெரிவித்தார்.
அக்கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அச்சந்தேக நபருடன் தொடர்புடைய மற்றோர் இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு உள்ளூர் சந்தையில் விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் பெருமளவிலான போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்நபரும் இன்னும் பிடிபடாமல் இருக்கும் அவரது நண்பர்கள் சிலரும் இவ்வாண்டு தொடக்கத்திலிருந்தே அச்சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது. பிடிபட்ட நபரின் குடியுரிமையை உறுதிப்படுத்த மேலதிக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதற்கு முன் எந்தக் குற்றப் பதிவோ அல்லது போதைப்பொருள் தொடர்பான பதிவோ இல்லாத அந்நபர், 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வேளையில், சுமார் 85,000 ரிங்கிட் மதிப்புடைய புரோட்டான் X50 வாகனமொன்றையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. விநியோக வலையமைப்புடன் தொடர்புடைய விநியோகஸ்தர், இடைத்தரகர்கள் மற்றும் பிறரை அடையாளம் காண விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் Fadil தெரிவித்தார்.



