பெட்டாலிங் ஜெயா, ஜூன் 21 – 2024-ஆம் ஆண்டு, பொது சுகாதாரத்துக்கான புகைபிடிக்கும் கட்டுப்பாட்டு சட்டத்தின், விதிமுறைகள் மற்றும் உத்தரவுகளின் இறுதி வரைவு, சுகாதார அமைச்சின் சட்ட ஆலோசகரின் பரிசீலனையில் உள்ளதாக, சுகாதார அமைச்சர் ஜுல்கிப்ளி அஹ்மாட் (Dzulkefly Ahmad) தெரிவித்தார்.
தேசிய சட்டத்துறை அலுவலகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், அது குறித்து, NGO எனப்படும் புகையிலை எதிர்ப்பு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு விளக்கம் அளிக்கப்படுமென, அமைச்சர் சொன்னார்.
வயது குறைந்தவர்களுக்கு, புகையிலை சார்ந்த பொருட்களை விற்க தடை செய்யும் விதிமுறைகளை, 2024-ஆம் ஆண்டு, பொது சுகாதாரத்துக்கான புகைபிடிக்கும் கட்டுப்பாட்டு சட்டம் உள்ளடக்கியுள்ளது.
புகைப்பதற்கு எதிரான சட்ட மசோதா, கடந்தாண்டு டிசம்பர், மேலவையின் அங்கீகாரத்தை பெற்றதை தொடர்ந்து, அரசாங்க பதிவேட்டில் இடம் பெறச் செய்யப்பட்டது.
அச்சட்ட அமலாக்கம் சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்ய, மாநில சுகாதார துறை மற்றும் ஊராட்சி மன்றங்களுடன் சுகாதார அமைச்சு சந்திப்புகளை நடத்துமெனவும் ஜுல்கிப்ளி கூறியுள்ளார்.
முன்னதாக, அந்த சட்டத்தை அமல்படுத்து குறித்து அறிவிப்பு அல்லது முறையான திட்டம் எதுவும் வெளியிடப்படாததால், அது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் சிலர் கவலை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.