Latestமலேசியா

புதிய அதிநவீன அனைத்துலகப் பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்தார் அன்வார்

கோலாலாம்பூர், ஜூன்-30-மலேசியர்களுக்கான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அதிநவீன அனைத்துலகக் கடப்பிதழை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

புதிய பயோமெட்ரிக் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்தக் கடப்பிதழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வேளை, உலகளவில் மூன்றாவது மிகவும் சக்திவாய்ந்த கடப்பிதழ் என்ற தனது உயரிய தகுதியையும் மலேசியா வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கைக்கு ஏற்பவும், குடிமக்களின் பாதுகாப்புத் தரத்தை அனைத்துலக அளவுக்கு உயர்த்தவும் இந்த புதிய கடப்பிதழ் வடிவம் கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பிரதமர் தனது தொடக்க உரையில் குறிப்பிட்டார்.

மலேசியாவின் வலுவான தூதரக உறவுகளின் அடையாளமாக விளங்கும் இந்த புதியக் கடப்பிதழ்களின் வழி, மலேசியக் குடிமக்கள் விசா இல்லாமலோ அல்லது வந்திறங்கியதும் விசா வசதியுடனோ நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு எவ்வித தடையுமின்றி இன்னும் கூடுதல் பாதுகாப்புடன் பயணிக்க முடியும்.

இந்த புதியப் பதிப்பில், புற ஊதா (UV) ஒளியின் கீழ் நாட்டின் முக்கிய அடையாளங்களை வெளிப்படுத்தும் அதிநவீன பாதுகாப்பு வடிவமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

ஆள்மாறாட்டம் மற்றும் கடப்பிதழ் மோசடிகளை முழுமையாகத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த அம்சங்கள், உலகளவில் மலேசியா மூன்றாவது இடத்தை நீடிக்கப் பெருந்துணையாக இருக்கும்.

இந்த புதியக் கடப்பிதழைப் பெற விரும்பும் பொது மக்கள், மலேசிய குடிநுழைவு இலகாவின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கம் வழியாகவோ அல்லது நாடு முழுவதும் உள்ள குடிநுழைவு இலாகா அலுவலகங்கள் மற்றும் UTC மையங்களுக்கு நேரில் சென்றோ விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடப்பிதழை மாற்ற எந்த அவசரமும் இல்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!