
சுபாங் ஜெயா, மே 7- பூச்சோங் பிரிமாவில் திங்கட்கிழமையன்று
ஒரு அடகுக் கடையில் நடந்த கொள்ளை முயற்சி தொடர்பாக மூன்று நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அந்த அடகுக்கடையின் மேலாளரிடமிருந்து இந்தச் சம்பவம் குறித்து தனது துறைக்கு புகார் கிடைத்ததாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவிக் கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமாட் ( Wan Azlan Wan Mamad ) தெரிவித்தார்.
பாராங் போன்ற ஆயுதங்களுடன் இருந்த மூன்று சந்தேக நபர்கள், அந்த வளாகத்தின் முகப்பிடத்திற்குள் நுழைய முயன்றபோதிலும் அதில் அவர்கள் தோல்வி கண்டதாக நம்பப்படுகிறது.
அவர்கள் தப்பி ஓடியதைத் தொடர்ந்து புகார்தாரர் உடனடியாக பாதுகாப்பு எச்சரிக்கை மணியை எழுப்பியதாக வான் மஸ்லான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், 03-78627222 என்ற எண்ணில் சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்புகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தகவல் அளிப்பவர்களின் அடையாளங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். கருப்பு உடை அணிந்த மூவர் ஒரு வளாகத்திற்குள் நுழைவதையும் பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.



