
சுங்கைப் பட்டாணி, மார்ச் 24- சுங்கைப் பட்டாணியில் பெடோங்கில் பூட்டப்பட்டிருந்த வீட்டில், ஒரு பெண்ணும் அவரது மகனும் இறந்து 48 மணி நேரத்திற்கும் மேலாகி இருந்த நிலையில், அவர்களின் அழுகிய சடலங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டன.
நேற்று மாலை மணி 6.05 க்கு இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக கோலா மூடா போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ஹன்யான் ரம்லான் ( Hanyan Ramlan ) தெரிவித்தார்.
40 வயது மதிக்கத்தக்க ஆடவர் மற்றும் சுமார் 70 வயதுள்ள அவரது தாய் ஆகியோரின் சடலங்கள் வரவேற்பறை மற்றும் சமையல் அறைகளில் கண்டுப்பிடிக்கப்பட்டது.
அவர்களின் உடல்களில் கூர்மையான ஆயுதங்களால் ஏற்பட்ட காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. வீடு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்து உள்ளே செல்ல வேண்டியிருந்தது என இன்று வெளியிட்ட அறிக்கையில் Hanyan Ramlan தெரிவித்தார்.
இறந்தவர்களின் உடல்கள் 48 மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பிரேதப் பரிசோதனை முடிவுகள் தெரியும்வரை அவர்கள் திடீர் மரணம் அடைந்தனர் என வகைப்படுத்தப்படும் என Hanyan Ramlan தெரிவிவித்தார்.



