கோத்தா பாரு, ஆக்ஸ்ட் 26 – முன்னாள் பேரரசரை சிறுமைப்படுத்தும் விதமாக கருத்துரைத்த முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் மீது நாளை குற்றம் சாட்டப்படும்.
இந்த வழக்கு விசாரணை நாளை குவா மூசாங் நீதிமன்றத்தில் நடைபெறும் என கிளாந்தான் மாநிலப் பெர்சத்து கட்சியின் தலைவர் டத்தோ கமாருடின் முஹம்மத் நூர் (Datuk Kamaruddin Md Noor) உறுதிப்படுத்தினார்.
நெங்கிரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் பிரச்சாரத்தின் போது 3R எனப்படும் இனம், மதம், அரசு குடும்பம் தொடர்பாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முஹிடின் யாசின் பேசியது குறித்த விசாரணை அறிக்கை, சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
விசாரணைக்கு உதவுவதற்காக இதுவரை 66 சாட்சிகளின் வாக்குமூலங்களையும் காவல்துறை பதிவு செய்துள்ளதாக ஐ.ஜி.பி டான் ஸ்ரீ ரசாருடின் கூறியுள்ளார்.
முன்னதாக, நெங்கிரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, முன்னாள் பேரரசர் பகாங் ஆட்சியாளர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவை (Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah) சிறுமைப்படுத்தி பேசிய டான் ஸ்ரீ முஹிடின் யாசின் காணொளிகள் வைரலானது.