
செப்பாங் – ஆகஸ்ட்-12 – லேசியத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கமான பெர்த்தாமா (PERTAMA), அண்மையில் அதன் 16-ஆவது தேசிய மாநாட்டையும் தலைமைத்துவ மாநாட்டையும் நடத்தியது.
பெர்த்தாமாவின் கருப்பொருளான “ஒரே குடையின் கீழ் ஒன்றுபடுவோம்” என்பதற்கு ஏற்ப, சமூக உணர்வை வளர்ப்பது, முன்னாள் மாணவர்களிடையே உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதே இதன் நோக்கமாகும்.
சிலாங்கூர், செப்பாங், Akademi Kenegaraan Malaysia மையத்தில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்வின் இணை ஏற்பாட்டாளர் சிலாங்கூர் பெர்த்தாமா கிளையாகும். மூத்த அரசியல்வாதியும், கிராமப்புற மேம்பாட்டுத் துறை முன்னாள் துணையமைச்சருமான தான் ஸ்ரீ க.குமரன் நிகழ்ச்சிக்குத் தலைமைத் தாங்கினார்.
பெர்த்தாமாவின் தேசியத் தலைவர் டத்தோ R.R.M கிருஷ்ணனும் அதில் கலந்துகொண்டார். சொந்த அலுவலகக் கட்டடத்தை நிர்மாணிக்கவும், அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளிலும் பெர்த்தாமா கிளைகளைத் திறக்கவும் எண்ணம் கொண்டிருப்பதாக, டத்தோ R.R.M கிருஷ்ணன் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
தமிழ்ப் பள்ளி முன்னாள் மாணவர்களை தேசிய அளவில் ஒன்றிணைக்கும், ஒருங்கிணைக்கும் இது போன்ற நிகழ்ச்சிகள் பாராட்டத்தக்கவை என்பதோடு, ஊக்குவிக்கப்பட வேண்டியவை என, தான் ஸ்ரீ குமரன் தெரிவித்தார்.
இவ்வாண்டு நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததாக பெர்த்தாமா துணைத் தலைவர் கேசவன் நாகராஜூ கூறினார்.
மாநாட்டில், அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் முந்தைய ஆண்டு நிதிநிலை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதோடு, எதிர்கால திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
நாடாளவிய நிலையில் 70 பள்ளிகளைப் பிரதிநிதித்து 120 பெர்த்தாமா உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.