தைப்பிங், ஜூலை 3 – பேராக், பெங்காலான் உலுவிலிருந்து, ஆறு வியட்நாமிய பெண்களை கடத்தியதாக, குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவர் உட்பட நான்கு ஆடவர்களுக்கு எதிராக, தைப்பிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 42 வயது அப்துல் ஹடி மாட் டின், தாய்லாந்து ஆடவனான 48 வயது சுக்ரீ அவாங், உள்நாட்டு ஆடவர்களான 58 வயது தியோ பூன் போ மற்றும் 47 வயது சுவா எங் கியோங் எனும் அந்நால்வரும், தங்களுக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
2023-ஆம் ஆண்டு, மார்ச் ஒன்பதாம் தேதி, பெங்காலான் உலு, புக்கிட் பெராபிட் ICQS – குடிநுழைவு, சுங்க, தனிமைப்படுத்தும் வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
இவ்வழக்கு விசாரணை ஜூலை 31-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.