கோலாலம்பூர், மே 23 – தலைநகர், டமன்சாராவிலுள்ள, பேரங்காடி ஒன்றில், தேசிய காற்பந்து வீரர் பைசால் ஹலிம் மீது அமில தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையது என நம்பப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
குறிப்பாக, அந்த 50 வினாடி காணொளி, X சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த காணொளியில், கட்டடம் ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் ஒன்றின் பின்னால், அமில தாக்குதலை மேற்கொண்டவன் என நம்பப்படும் ஆடவன் ஒருவன் பதுங்கி இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து, பைசால் என நம்பப்படும் நபர், பெண் ஒருவர் பின் தொடர தனது காரை நோக்கி செல்கிறார்.
அதனை கண்ட பதுங்கி இருந்த ஆடவன், மறைவிடத்திலிருந்து வெளியே வந்து, நடந்து செல்லும் நபரை பின் தொடர்ந்து, அவர் மீது அமிலத்தை வீசுவதை காண முடிகிறது.
அதனை தவிர்க்க முயலும், நடந்து செல்லும் நபர் அவ்விடத்தை விட்டு தப்பி ஓடுகிறார்.
அதனை தொடர்ந்து, முகமூடியும், தலைகவசமும் அணிந்திருந்தும் ஆடவன், மோட்டார் சைக்கிளில் அவ்விடத்தை விட்டு தப்பி ஓடுகிறான்.
எனினும், அந்த CCTV பதிவின் நம்பகத்தன்மையை போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இம்மாதம் ஐந்தாம் தேதி, பைசால் மீது மேற்கொள்ளப்பட்ட அமில தாக்குதல் நாட்டையே உலுக்கியது. அதனால், ஹரிமாவ் மலாயா அணியின் முக்கிய ஆட்டக்காரரான 26 வயது பைசால் மோசமான தீப்புண் காயங்களுக்கு இலக்கானார்.