
பேங்கோக், மே-7-தாய்லாந்துக்கு வரும் சுற்றுப் பயணிகள் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
அண்மையக் காலமாக, சில வெளிநாட்டுப் பயணிகள் பொது இடங்களில் அநாகரீகமான முறையில் உடலுறவில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
குறிப்பாக, மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் அரங்கேறிய இந்தச் சம்பவங்கள் தாய்லாந்து மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதனையடுத்து, தாய்லாந்து அதிகாரிகள் சுற்றுலாத் தலங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், பொது இடங்களில் அநாகரீகமாக நடப்பவர்கள் உடனடியாகக் கைதுச் செய்யப்படுவார்கள்.
அவர்களுக்குக் கடும் அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதோடு, மீண்டும் தாய்லாந்துக்குள் நுழைய நிரந்தரத் தடை விதிக்கவும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Phuket மற்றும் Pattaya போன்ற முக்கிய சுற்றுலா நகரங்களில் கூடுதல் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
“தாய்லாந்து ஒரு கலாச்சாரப் பெருமை கொண்ட நாடு; இங்கு வரும் பயணிகள் உள்ளூர் மரபுகளை மதிக்க வேண்டும்” என்று அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.



