மும்பை, ஏப்ரல்-15, இந்தியா, மும்பையில் உள்ள பிரபல போலிவூட் நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சல்மான் கானின் வீடு அமைந்துள்ள கேலக்ஸி அடுக்குமாடிக் கட்டடத்துக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு முறை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அப்போது சல்மான் கான் வீட்டில் இருந்தாரா இல்லையா என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து சல்மான் கான் வீட்டுக்கு வெளியே போலீசார் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் இடத்தில் விசாரித்த போலீசார், சல்மான் கான் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை கண்டெடுத்தனர்.
அது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் ஓட்டி வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
சல்மான் கான் வீட்டுக்கு அருகே பொருத்தப்பட்டுள்ள CCTV கண்காணிப்பு கேமரா பதிவுகளும் விசாரணைக்காகச் சேகரிக்கப்பட்டுள்ளன.
கடந்தாண்டு மார்ச் மாதம், சல்மான் கானை மிரட்டும் வகையில் அவரது அலுவலகத்துக்கு இ-மெயில் அனுப்பப்பட்டது தொடர்பில் மூவர் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.