மலாக்கா, ஜூலை-18, போலீஸ்காரர்களை நோக்கி ஆபாச சைகைக் காட்டிய ஆடவருக்கு, மலாக்கா மேஜிஸ்திரேட் நீதிமன்றம் 5,450 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
தம் மீது சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளையும் தொழிற்சாலை ஊழியரான ஜே.டேனியல் எனும் 31 வயது அவ்வாடவர் ஒப்புக் கொண்டார்.
ஜூன் 17-ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில் பண்டா ஹிலிர் போலீஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரிடம் தகாத வார்த்தைகளைப் பிரயோகித்தது, 2 போலீஸ்காரர்களை நோக்கி ஆபாச சைகைக் காட்டியது, போலீஸ்காரர்களைக் கடமையாற்ற விடாமல் தடுத்தது ஆகியவே அம்மூன்று குற்றச்சாட்டுகளாகும்.
அவரின் குற்றங்களுக்கு சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
இருந்தாலும், தொழிற்சாலை ஊழியராக மட்டுமே வேலை செய்வதாலும், தாயைப் பராமரிக்க வேண்டியக் கட்டாயமிருப்பதாலும் டேனியலுக்கு அபராதம் மட்டுமே விதிக்குமாறு அவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் முறையிட்டார்.
இதையடுத்து, நீதிமன்றம் அவருக்கு அந்த 5,450 ரிங்கிட் அபராதத்தை விதித்தது.
அபராதத்தைச் செலுத்தியதால் சிறைத் தண்டனையில் இருந்து அவர் தப்பியுள்ளார்.