மகன் மீதான தாக்குதலுக்கு இஸ்மாயில் சாப்ரி, கைரி காரணமல்ல: ரஃபிசி விளக்கம்

கோலாலாம்பூர் – ஆகஸ்ட்- 20 – தாம் அம்பலப்படுத்தவிருப்பதாகக் கூறப்படும் ஒரு பெரிய மோசடி, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி அல்லது முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலூடின் சம்பந்தப்பட்டது அல்ல என, பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி கூறியுள்ளார்.
தமக்கு வழங்கப்பட்ட ‘துப்புகள்’ அவ்விருவர் தொடர்புடையது அல்ல என, ஃபேஸ்புக்கில் ரஃபிசி சொன்னார். எனவே, கருப்புப் பண மோசடி தொடர்பில் இஸ்மாயில் சாப்ரி, கைரி இருவரையும் ‘சிக்க வைப்பதே’ தமது நோக்கம் என பரப்பப்படும் வதந்திகள், விவகாரத்தை திசை திருப்பும் முயற்சி என்றார் அவர்.
தகவல் வழங்கி உதவியவருடன் தாம் திடீரென சந்திப்பு நடத்தியதாக திடீரென பரவி வரும் ‘குற்றச்சாட்டுகள்’ குறித்து அவர் இவ்விளக்கத்தை அளித்துள்ளார்.
அவ்வதந்திகள் தொடர்பில் போலீஸில் புகார் செய்யும் இஸ்மாயில் சாப்ரியின் நடவடிக்கையை தாம் முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் சொன்னார். அண்மையில் புத்ராஜெயாவில் ரஃபிசியின் மகன் மர்ம கும்பலால் தாக்கப்பட்டார்.
அது, தற்போது விசாரணை நடைபெற்று வரும் ஒரு மோசடி குறித்து தாம் வாய்த் திறக்காமல் இருக்க விடுக்கப்பட்ட ஒரு வகை மிரட்டலே என அப்போது ரஃபிசி கூறியது குறிப்பிடத்தக்கது.