
மலாக்கா, ஏப்ரல்-23-மலாக்காவில், 3 வயது சிறுமியின் உடலில் THC எனப்படும் ஒருவகை கஞ்சா பயன்பாடு பரிசோதனையில் அம்பலமான அதிர்ச்சி சம்பவத்தில்,சமூக ஊடகப் பிரபலம் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
அந்தச் சிறுமி ஏப்ரல் 14-ஆம் தேதி அரை மயக்கநிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
அதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக பராமரிப்பாளரின் வீட்டிலிருந்து கூட்டிச் சென்றதிலிருந்து மகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதாக தாய் மருத்துவர்களிடம் கூறியிருந்தார்.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸார், அக்குழந்தையைப் பராமரித்து வந்த மாதுவின் மகனான 39 வயது சந்தேகநபரைக் கைதுச் செய்தனர்.
அவர் ஏப்ரல் 27 வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவ்வாடவருக்குப் பழையக் குற்றப் பதிவுகள் எதுவும் இல்லையென்றும், போதைப்பொருள் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் 2001 சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
இதற்கிடையில், அந்த சிறுமி சிகிச்சைக்கு பிறகு தற்போது குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.



