மலாக்கா, ஜூலை 17 – மலாக்கா, சுங்கை ஆயிர் (Sungai Ayer) ஆற்றில் இருக்கும் முதலை ஒன்று, கடந்த மே மாதம் தொடங்கி இதுவரை மூன்று ஆடுகளை விழுங்கியுள்ளது.
அதனால், தனக்கு ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, கிளேபாங் (Klebang) , புலாவ் கடோங் (Pulau Gadong), கம்போங் தெங்ஙாவை ( Kampung Tengah) சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆகக் கடைசியாக, நேற்று மாலை 6.35 வாக்கில், சுங்கை ஆயிர் ஆற்றங்கரையில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட தனது போயர் (Boer) ரக ஆட்டை முதலை கெளவிச் சென்றதாக, 28 வயது முஹமட் ஹபிஸ் ஹைகால் அப்துல்லா (Muhammad Hafiz Haiqal Abdullah) எனும் அவ்வாடவர் கூறியுள்ளார்.
அதனால், கால்நடைகள் மற்றும் சுற்று வட்டார மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய, மாநில பெர்ஹிலிதான் – தேசிய பூங்கா வனவிலங்கு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அந்த முதலையை பிடிக்கவோ, சுட்டுக் கொல்லவோ உதவ வேண்டும் என ஹபீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
மற்றொரு நிலவரத்தில், கம்போங் மோர்டன் (Kampung Morten) அருகே, மலாக்கா ஆற்றிலும், முதலையின் நடமாட்டம் இருப்பதாக, கூறப்படுகிறது.
அண்மையில், அந்த ஆற்றில் இருக்கும் முதலையை சுற்று வட்டார மக்களுடன், அந்நிய சுற்றுப் பயணிகள் சிலரும் புகைப்படம் எடுத்ததாக, அப்பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் கூறியுள்ளார்.
இவ்வேளையில், அவ்விரு முதலைகளையும் பிடிக்க ஏதுவாக, மாநில பெர்ஹிலிதான் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, அதன் இயக்குனர் பெட்ரா சுலை (Petra Sulai) உறுதிப்படுத்தியுள்ளார்.