
மலாக்கா, மே-3-மலாக்கா இந்து மயான மேம்பாட்டுத் திட்டம் தோல்வியடைந்ததாகக் கூறப்படும் புகார்கள் முதிர்ச்சியற்றவை மற்றும் தவறானவை எனப் பிரதமரின் சிறப்பு விவகாரங்களுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் தெரிவித்துள்ளார்.
மலாக்கா இந்து சங்கம் மற்றும் மலாக்கா மாநில இந்து அறப்பணி அமைப்பு நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மலாக்காவில் 2 புதிய தகன இயந்திரங்களை நிறுவுவதற்காக, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் 800,000 ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிதி கடந்தாண்டு அக்டோபரில் நிதி அமைச்சின் மூலம் முறையாக வழங்கப்பட்டதாக சண்முகம் சொன்னார்.
தலைமைத்துவ மாற்றங்களால் நிர்வாகச் சீரமைப்பு தேவைப்பட்டாலும், தற்போது இத்திட்டம் அமுலாக்கக் கட்டத்தில் உள்ளது.
எனவே நிதி முறைகேடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், திட்டம் ஒருவேளை செயல்படுத்தப்படாவிட்டால் அந்நிதி மீண்டும் அரசாங்கத்திடமே ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.
இத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க அனைத்து தரப்பினரும் ஒரு குழுவாகச் செயல்பட ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தேவையற்ற வதந்திகள் திட்டத்தைத் தாமதப்படுத்தும் என்பதால், பொது மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சண்முகம் கேட்டுக் கொண்டார்.
சமூகத்தின் நலனை முன்னிறுத்தி, இத்திட்டம் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.



