கோலாலம்பூர், ஆகஸ்ட்-9, மலேசியாவில் தொழிற்சாலையைத் திறக்கப் போவதாக அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான தெஸ்லா (Tesla) எக்காலத்திலும் கூறியதே இல்லையென்கிறார் அனைத்துலக வாணிபம், முதலீடு மற்றும் தொழிற்துறை அமைச்சர் தெங்கு சாவ்ருல் அசிஸ் (Tengku Zafrul Aziz).
அமைச்சும் அப்படியோர் அறிவிப்பை வெளியிட்டதில்லை என்றார் அவர்.
தெஸ்லா தலைமை செயலதிகாரி இலோன் மஸ்குடன் (Elon Musk) நாங்கள் முதலீட்டுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதென்னமோ உண்மைதான்; ஆனால் இங்கு கார் தயாரிப்பு தொழிற்சாலை எதனையும் திறப்பதாக அவர் உறுதியேதும் கொடுக்கவில்லை என அமைச்சர் சொன்னார்.
மலேசியா உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் தொழிற்சாலைகளை அமைக்கும் திட்டத்தை தெஸ்லா ரத்துச் செய்திருப்பதாக, தாய்லாந்து நாளேடான The Nation முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
அது குறித்து அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டுமென எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்திய நிலையில், தெங்கு சாவ்ருல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தாய்லாந்து நாளேட்டின் செய்தி அனாமதேய மூலத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது; தெஸ்லாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதனையும் அது மேற்கோள் காட்டவில்லை என்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.