
கோலாலம்பூர், நவ- 3 –மலேசியா இணையத் தாக்குதல்களுக்கு இலக்காகக்கூடிய நாடுகளில் ஒன்றாக இருப்பதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார். நாட்டின் டிஜிட்டல் திறன் மற்றும் Gaza விவகாரம் உள்ளிட்ட சர்வதேசப் பிரச்சினைகளில் மலேசியா கொண்டுள்ள நிலைப்பாடு இதற்கான காரணங்களாக இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் அண்மையில் நிகழ்ந்த இணையத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களைச் சுட்டிக் காட்டிய அவர், பெல்ஜியத்தின் தேசிய வரி இணையத்தளம் முடக்கப்பட்டது, டென்மார்க்கில் சுமார் 90 லட்சம் பேரின் அடையாளத் தரவுகள் பாதிக்கப்பட்டது, அமெரிக்காவின் கூட்டரசு தேர்தல் ஆணையத்தின் கோப்பு முறை 41 மணி நேரம் செயலிழந்தது உள்ளிட்ட சம்பவங்களைக் குறிப்பிட்டார்.
இதனிடையே, அடுத்த ஓரிரு நாட்களில் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் (NSC) தலைமை இயக்குநர் Datuk Raja Nushirwan Zainal Abidin, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அண்மைய பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து மூடிய அறை விளக்கமளிக்க வேண்டும் என்று அன்வார் பரிந்துரைத்தார். இந்த அச்சுறுத்தல்களை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, அரசாங்கத் தலைமைச் செயலாளர் Tan Sri Shamsul Azri Abu Bakar இன்று சம்பந்தப்பட்ட துறைகளுடன் கூட்டம் நடத்துகிறார். அதோடு பேங்க் நெகாரா மலேசியா ஆளுநர் நிதி நிறுவனங்களுடன் சிறப்புக் கூட்டம் நடத்துவார் என பிரதமர் தெரிவித்தார்.
டிஜிட்டல் மற்றும் கலப்பின இணையவழித் தாக்குதல்கள், மத்திய கிழக்கு பதற்றத்தால் ஏற்படக்கூடிய அணுக்கதிர் வீச்சு அச்சுறுத்தல்கள், ஐரோப்பிய அரசியல் நிகழ்வுகளின் தாக்கம் உள்ளிட்ட விவகாரங்களை ஆய்வு செய்ய நேற்று தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றதாகவும் அன்வார் கூறினார்.
அதனை அடுத்து, அமைச்சு மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது, மூலோபாய உள்கட்டமைப்புகளான எரிசக்தி, போக்குவரத்து, நிதி மற்றும் உணவு விநியோகத்துக்கான பாதுகாப்பை அதிகரிப்பது, இணையவழித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட ஐந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.



