Latestமலேசியா

இறைச்சிக் கூடங்களைக் கண்காணிப்பதில் அதிகார வரம்பு குழப்பம் – ஹலால் விதிமீறல் அபாயம்

கோலாலம்பூர், நவம்பர் 4 – மலேசியாவில் கோழி இறைச்சிக் கூடங்களைக் கண்காணிப்பதிலும், ஹலால் விதிமுறைகளை அமல்படுத்துவதிலும் பல்வேறு அரசுத் துறைகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு குழப்பம் சிக்கலை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை சேவைகள் துறை (DVS), உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு (KPDN), சுகாதார அமைச்சு, சுற்றுச்சூழல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய சமய அதிகாரிகள் எனப் பல தரப்புகள் வெவ்வேறு பொறுப்புகளைக் கொண்டுள்ளதால், கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பு குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இறைச்சிக் கூடம் நடத்துவதற்கான உரிமம் பெற்றிருப்பது, ஹலால் சான்றிதழ் பெற்றிருப்பதைக் குறிக்காது என மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (JAKIM) தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து இறைச்சிக் கூடங்களும் மலேசிய ஹலால் சான்றிதழ் (SPHM) பெற வேண்டும் என்ற கட்டாய விதிமுறை தற்போதைய சட்டங்களில் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் சிலாங்கூர், பூச்சோங் பகுதியில் கோழி இறைச்சிக் கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்த விவகாரம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

இதற்கிடையில், ஹலால் சான்றிதழை இறைச்சிக் கூடங்கள் முதல் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் வரை கட்டாயமாக்க வேண்டுமென மூத்த ஆய்வாளர் பிலால் ஜெய்லானி (Bilal Jailani) வலியுறுத்தியுள்ளார். அதேவேளையில், கோழி மற்றும் இறைச்சி விநியோகச் சங்கிலி முழுவதும் முறையான கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் தேவை என புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முகமட் ராட்ஸி மாட் ஜிடின் (Mohd Radzi Md Jidin) வலியுறுத்தியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!