
தெலுக் இந்தான், நவ-04-பேராக், தெலுக் இந்தான், Taman Banjar JAYAவில் கடையொன்றின் முன்புறம் மூன்று நபர்களால் கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கப்பட்ட ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று பிற்பகல் சுமார் 3.53 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக Hilir Perak மாவட்டக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் Chua Kok Lian தெரிவித்தார். பலத்த காயமடைந்த அவ்வாடவர், தெலுக் இந்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காது இறுதியில் மரணமடைந்ததாக அவர் கூறினார்.
பாராங் கத்திகளுடன் வந்த மூன்று நபர்கள் அவரைத் தாக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உதவும் வகையில் 27 வயதுடைய உள்ளூர் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302இன் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் Hilir Perak மாவட்டக் காவல்துறைத் தலைமையகத்தை 05-629 9222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வணிக வளாகம் ஒன்றின் முன்புறம் ஆடவர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் தரையில் கிடந்த நிலையில், அருகிலிருந்த பெண் ஒருவர் அவருக்கு முதலுதவி அளிக்க முயற்சிக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி முன்னதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. சம்பவ இடத்தில் தரையில் ரத்தக் கறைகளும் காணப்பட்டன.



