
ஈப்போ, ஜூன்-12-பேராக், தாப்பாவில் 2 வாரங்களாகக் காணாமல் போய் பரபரப்பை ஏற்படுத்திய பெண் மலையேறி ஜஸ்லிண்டா சாலுடின் (Jaslinda Saludin) மீட்பு விவகாரத்தில், பூர்வகுடித் தலைவரான Tok Batin மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய உள்ளூர் நபர் ஒருவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
மலைப்பகுதியில் 14 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 49 வயது ஜஸ்லிண்டாவை, Kampung Lubuk Gaharu பூர்வக்குடி கிராமத்தின் Tok Batin தனது கிராமத்தில் வலுக்கட்டாயமாக மறைத்து வைத்திருந்ததாக, டிக் டோக்கில் சம்பந்தப்பட்ட ஆடவர் பொய்க் குற்றச்சாட்டைப் பரப்பியிருந்தார்.
உண்மையில், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தப் பெண்ணுக்குப் பூர்வகுடி மக்களே உணவளித்து, முதலுதவி வழங்கி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த நல்லெண்ணத்தை வதந்திகள் மூலம் கொச்சைப்படுத்தியதால் அவ்வாடவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து, குற்றவியல் சட்டம், தொடர்பு – பல்லூடகச் சட்டம், மற்றும் சிறு சிறு குற்றங்கள் சட்டத்தின் கீழ் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பொது அமைதியைக் குலைக்கும் வகையிலான இத்தகைய பொய்ச் செய்திகளையும் யூகங்களையும் பொது மக்கள் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



