பியோங் யாங், ஜூன்-19, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ( Vladimir Putin) 24 ஆண்டுகளில் முதன் முறையாக பியோங் யாங் (Pyong Yang) சென்று சேர்ந்துள்ளார்.
வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன்னுடன் (Kim Jong-un) முக்கியப் பேச்சுவார்த்தையில் பற்கேற்பதே அப்பயணத்தின் நோக்கமாகும்.
எதிர்பார்த்தபடியே புட்டினுக்கு சிவப்புக் கம்பளத்துடன் தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிம் ஜோங்-உன்னே நேரில் சென்று வரவேற்றது புட்டினின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் இருந்தது.
யுக்ரேய்ன் – ரஷ்யா இடையே போா் நீடித்து வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பதே புட்டினின் திட்டமாகும்.
அதன் ஒரு பகுதியாகவே அவர் 2 நாள் பயணமாக வட கொரியா சென்றுள்ளார் என கூறப்படுகிறது.
அதனை மெய்ப்பிக்கும் வகையில், யுக்ரேய்னுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் பக்கம் நின்றதற்காக, பியோங் யாங் புறப்படும் முன் வட கொரியாவுக்கு புட்டின் நன்றித் தெரிவித்துள்ளார்.
அதோடு, உலக அரசியல் ஒருதலைப்பட்சமானதாக இருக்க வேண்டும் என நினைக்கும் மேற்கத்திய நாடுகளின் முயற்சியை ரஷ்யாவும் வட கொரியாவும் கூட்டாக எதிர்க்கும் என்றார் அவர்.
ஏற்கனவே அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் ஆகாத நிலையில், புட்டினின் வட கொரிய பயணத்தை வாஷிங்டன் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.