Latestமலேசியா

மெங்கிபோல் தோட்டத் தமிழ்ப்பள்ளி நில விவகாரம்: ஒன்பது ஆண்டுகளாகியும் தீர்வு காணப்படவில்லை – சிவமலர் கணபதி

குளுவாங், அக்-21-ஜோகூர், குளுவாங்கில் உள்ள மெங்கிபோல் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய பள்ளி வளாகத்திற்கான நில விவகாரம் ஒன்பது ஆண்டுகளாகியும் தீர்க்கப்படாதது குறித்து ஜோகூர் மாநில அரசு விளக்கமளிக்க வேண்டும் என KEADILAN கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினருமான சிவமலர் கணபதி வலியுறுத்தியுள்ளார்.

2017-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி வெளியிடப்பட்ட மாநில அரசிதழின்படி, கல்வி அமைச்சுக்காக குளுவாங் மாவட்டத்தில் 1.210 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்த அறிவிக்கப்பட்டது. நிலமும் அதன் நோக்கமும் அடையாளம் காணப்பட்ட நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள என்ன தடைகளாக உள்ளன என அவர் கேள்வி எழுப்பினார்.

கல்வி அமைச்சு நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையைச் செலுத்திவிட்டதாகக் கூறப்படும் வேளை, நில உரிமையை இறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில அதிகாரத்துவ தரப்பிடம் இருக்கிறது. நில விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்தும், குளுவாங் நில அலுவலகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அவ்விவகாரம் இன்று மக்களவையில் குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினரால் எழுப்பப்பட்டதாகக் குறிப்பிட்ட சிவமலர், நாடாளுமன்றத்தில் மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்த பின்னரே அப்பிரச்சினைக்கு கவனம் செலுத்தப்படுவது ஏற்புடையதல்ல என்றார்.

ஜோகூர் மந்திரி பெசார் தலையிட்டு, குளுவாங் நில அலுவலகத்திடம் தற்போதைய நிலவர அறிக்கையையும் தீர்வுக்கான கால அட்டவணையையும் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும். மேலும், அவ்விவகாரத்திற்குப் பொறுப்பான ஒருங்கிணைப்பு அதிகாரியையும் நியமிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அடுத்த 14 நாட்களுக்குள் மாநில அரசு அதிகாரபூர்வ விளக்கத்தை வெளியிட்டு, நில விவகாரத்தைத் தீர்ப்பதற்கான இலக்குத் தேதியை அறிவிக்க வேண்டும். தாமதத்திற்கான தடைகளைக் களைந்து, மாணவர்களும் பெற்றோரும் தொடர்ந்து பாதிக்கப்படாமல் புதிய பள்ளி வளாகத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என சிவமலர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!