
கோலாலம்பூர், அக்டோபர்-21,இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட Waze வழிகாட்டிச் செயலியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மலேசியர்களுக்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.
தமது தலைமையில் நடைபெற்ற தேசிய இணையப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில், Waze செயலியைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அபாயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக அவர் சொன்னார்.
இஸ்ரேலிய அரசாங்கத்தின் சட்டங்களுக்கு உட்பட்டுள்ள இந்தச் செயலி, பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் பயணத் தகவல்களின் பாதுகாப்புக்குச் சவாலாக அமையக்கூடும் என அவர் கவலைத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலாக, மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM உருவாக்கியுள்ள உள்நாட்டு வழிகாட்டிச் செயலியான TuJu-வைப் பயன்படுத்துமாறு பிரதமர் பரிந்துரைத்துள்ளார்.
மலேசியர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் அடையாளங்களின் பாதுகாப்பில் அரசாங்கம் எந்தச் சமரசமும் செய்துகொள்ளாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, பாதுகாப்புக் காரணங்களுக்காக, ஈராக் 2027-ஆம் ஆண்டு தொடக்கத்தில் Waze செயலிக்கு முழுமையான தடை விதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஈரானும் ஏற்கனவே அந்தச் செயலிக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
2008-ஆம் ஆண்டு இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட Waze செயலியை, 2013-ஆம் ஆண்டு கூகள் நிறுவனம் சுமார் 1.15 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது.
2017-ஆம் ஆண்டு நிலவரப்படி, மலேசியாவில் மாதந்தோறும் சுமார் 6 மில்லியன் பேர் Waze செயலியைப் பயன்படுத்தியுள்ளனர்.



