Latestமலேசியா

‘புடூ’ சந்தை அருகே கோழி வெட்டும் முறை குறித்து சந்தேகம்: JAKIM விசாரணை

கோலாலம்பூர், அக்டோபர் 20 – கோலாலம்பூர், ‘புடூ’ சந்தைக்கு (Pasar Pudu) அருகிலுள்ள ஓர் இடத்தில் கோழிகள் வெட்டப்படும் முறை குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான JAKIM விசாரணையைத் தொடங்கியுள்ளது.

JAKIM தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சிராஜுடின் சுஹைமி (Sirajuddin Suhaimee), இந்த விவகாரம் தொடர்பாக உள்ளாட்சி அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் மலேசிய ஹலால் சான்றிதழ் (SPHM) இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் (Radzi Jidin), கோழிகள் வெட்டப்பட்ட முறை, அவற்றின் ஹலால் நிலை மற்றும் அவை எங்கு விற்பனை செய்யப்பட்டன என்பதைக் கண்டறியுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற சமூக ஆர்வலர்கள், அங்கிருந்த தொழிலாளர்கள் தப்பிச் சென்றதாகவும், அங்கு நிறுவனத்தின் பெயர்ப்பலகையோ சான்றிதழ்களோ காணப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில், வெட்டப்பட்ட பின்னரும் துடித்துக்கொண்டிருந்த கோழிகள் தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் போடப்படுவது பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கோழிகள் முறையாக வெட்டப்பட்டு இறந்தனவா அல்லது தண்ணீரில் மூழ்கி இறந்தனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட கோழிகளைப் பறிமுதல் செய்து, அவற்றின் ஹலால் நிலை மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். மேலும், அந்த இடத்துக்குக் கோழிகளை அனுப்பியதாகக் கூறப்படும் பல்பொருள் அங்காடிக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும் இடையிலான தொடர்பையும் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!