
கோலாலம்பூர், அக்- 20-Zetrix AI Bhd மற்றும் Felda தொடர்பான விசாரணைகளை நிறுத்தவோ ஒத்திவைக்கவோ எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். விசாரணைகளை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் மேற்கொள்ள அவை அமலாக்கத் தரப்புகளிடம் விடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சில விசாரணைகள் முடிவடைய நீண்ட காலம் எடுக்கலாம். என்றாலும் அத்தாமதத்தை யாரையும் சட்ட நடவடிக்கையிலிருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியாகக் கருதக்கூடாது. Zetrix AI விவகாரம் தொடர்பாக சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ காவல்துறையில் புகார் அளித்துள்ளது. பாதுகாப்பு ஆணையமும் விசாரணை நடத்தி வருவதாக அன்வார் தெரிவித்தார்.
Felda தொடர்பாக 2019ஆம் ஆண்டில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், 2022ஆம் ஆண்டு தனது அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னரே தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கினார். விசாரணை ஆவணங்கள் தேசிய சட்டத்துறை அலுவலகத்துக்கு (AGC) பலமுறை திருப்பி அனுப்பப்பட்டதும் தாமதத்துக்குக் காரணமாக அமைந்ததாக அன்வார் கூறினார்.
இதனிடையே தாபூங் ஹாஜி (TH) விவகாரம் குறித்தும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மீட்புப் பணிகளுக்காக நடவடிக்கைகளைத் தற்காலிகமாக ஒத்திவைக்க நிர்வாகம் கோரியிருந்தாலும், விசாரணைகளைத் தொடர முடியும் என பிரதமர் தெரிவித்தார்.
மக்களவையில் பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அன்வார், விசாரணைகளில் தாமதம் ஏற்படுவதைவிட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே மோசமானது எனக் குறிப்பிட்டார். அனைத்து நடவடிக்கைகளும் ஆதாரங்கள் மற்றும் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் நியாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



