
கோத்தா திங்கி, அக்-20-ஜோகூர், கோத்தா திங்கியில் போலி மருத்துவச் சான்றிதழ்கள் தொடர்பில் 23 மற்றும் 22 வயதுடைய இரு பெண்களுக்கு தலா ஐந்து நாட்கள் சிறைத்தண்டனையும், 3,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. அவ்விருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டதை அடுத்து அத்தண்டனை அளிக்கப்பட்டது.
போலியானது எனத் தெரிந்திருந்தும் மருத்துவச் சான்றிதழைப் பயன்படுத்தியதாக, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 471-இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. சிறைத்தண்டனை அவர்கள் கைது செய்யப்பட்ட நாளிலிருந்தே அமலுக்கு வரும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால், கூடுதலாக மூன்று நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். குற்றவியல் சட்டத்தின் கீழ் அக்குற்றத்திற்காக அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அக்டோபர் 5-ஆம் தேதி, தனது கையொப்பம் போலியாக இடப்பட்ட மருத்துவச் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டிருப்பதை மருத்துவ அதிகாரி ஒருவர் கிளினிக் பணியாளர்கள் மூலம் அறிந்து கொண்டு காவல்துறையில் புகார் அளித்தார்.
அதே சமயம், அக்டோபர் 2-ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட பெண்களில் ஒருவரின் பணியிடத்தில் அவரது பெயரில் மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது. அச்சான்றிதழ் குறித்து சந்தேகமடைந்த அவரது முதலாளி, சம்பந்தப்பட்ட கிளினிக்கைத் தொடர்பு கொண்டு சரிபார்த்தார். சான்றிதழ் போலியானது என்பது உறுதியானதைத் தொடர்ந்து, Senai காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனை அடுத்து, கோத்தா திங்கியில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.



