மென்செஸ்டர், அக்டோபர்-29, பிரபல இங்லீஷ் பிரிமியர் லீக் கால்பந்து அணியான மென்செஸ்டர் யுனைடெட்டின் நிர்வாகி பொறுப்பிலிருந்து எரிக் தென் ஹாக் (Erik Ten Hag) நீக்கப்பட்டுள்ளார்.
புதிய நிர்வாகி நியமிக்கப்படும் வரை, நடப்பு உதவி பயிற்றுநரும் யுனைட்டெட்டின் சகாப்தமுமான ரூட் வான் நீசல் ரூய் (Ruud Van Nistelroy) தற்காலிகமாக அப்பொறுப்பை கவனிப்பார்.
பிரிமியர் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் ஹெம் (West Ham) அணியிடம் 1-2 என அதிர்ச்சி தோல்வி கண்ட மறுநாளே தென் ஹிக்கின் பணி நீக்க அறிவிப்பு வெளியானது.
இப்பருவத்தில் இதுவரை ஆடிய 9 ஆட்டங்களில் யுனைட்டெட் சந்தித்த நான்காவது தோல்வி அதுவாகும்.
இதனால் 20 அணிகள் அடங்கியப் புள்ளிப்பட்டியலில் யுனைட்டெட் 14-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது.
அதோடு அனைத்துப் போட்டிகளிலும் கடைசியாக ஆடிய 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே யுனைட்டெட் வெற்றிப் பெற்றுள்ளது.
கடந்த பருவ இறுதியிலேயே பணியிலிருந்து நீக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட தென் ஹாக், மே மாதம் FA கிண்ணத்தை வென்றதால் தலைத் தப்பினார்.
2022-ஆம் ஆண்டு டச்சு கிளப்பான அயாக்சிலிருந்து (Ajax) மாறி வந்த தென் ஹாக் முதல் பருவத்திலேயே யுனைட்டெட்டுக்கு கார்லிங் (Carling Cup) கிண்ணத்தை வென்றுகொடுத்தார்.