பெய்ஜிங், செப்டம்பர் -14, சீனாவில் மேல்மாடி வீட்டுக்காரர் இரவில் கழிவறையைப் பயன்படுத்தக் கூடாது என வம்படியாக கட்டுப்பாடுகள் போட்டு இம்சை கொடுத்து வந்த பெண்ணுக்கு, நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
முதல் மாடியில் குடியிருந்த அப்பெண், தனக்கு இரைச்சல் ஆகாது எனக் கூறிக் கொண்டு, மேல்மாடியில் குடியிருந்த ஆடவரிடம் அடிக்கடி சண்டைப் போட்டு வந்துள்ளார்.
இரவு 10 மணிக்கு மேல் கழிவறையைப் பயன்படுத்தக் கூடாது, பல் துலக்கக் கூடாது, பொருட்களை மறந்தும் தரையில் போட்டு விடக் கூடாது என கட்டுப்பாடுகளை அவர் அடுக்கியுள்ளார்.
அடிப்படைத் தேவைகளை மேற்கொள்வதற்குக் கூட உரிமையில்லையா என முதலில் ஆதங்கப்பட்டாலும், அவ்வாடவர் வீட்டுக்குள் சத்தம் வராதவாறு மிருதுவான செருப்பு அணிந்தும் தரையில் கார்ப்பெட் போட்டும் தன்னை மாற்றிக் கொண்டார்.
தப்பித் தவறி கீழே ஏதும் விழுந்து விட்டால் கூட, கீழ்மாடி பெண் ஆவேசமடைந்து விடுவாராம்.
பதிலடியாக, அவ்வாடவரை சினமூட்டும் வகையில் வேகமான இரைச்சலுடன் பாட்டுக் கேட்பதும், கட்டையால் வீட்டு சிலிங்கை தட்டுவதுமாக அவர் இம்சை கொடடுத்து வந்துள்ளார்.
எத்தனையோ முறை போலீஸ் வந்து சமாதானம் செய்தும் எச்சரித்துப் பார்த்தும் பலனில்லை.
பொறுத்துப் பொறுத்துப் பொறுமையிழந்த அவ்வாடவர் கடைசியில் நீதிமன்றத்தின் உதவியை நாட, 2,750 டாலர் இழப்பீட்டைத் தருமாறு அப்பெண்ணுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.