ரவாங், ஆகஸ்ட்-1, சிலாங்கூர், ரவாங்கில் நேற்றிரவு நிகழ்ந்த ஒரு சம்பவத்தில், Honda CRV கார் படு வேகமாகவும் கண்மூடித்தனமாகவும் சென்றதோடு மட்டுமல்லாது, ஒரு மோட்டார் சைக்கிளை மோதி 500 மீட்டர் தூரத்திற்கு அதை இழுத்துச் சென்றது வைரலாகியுள்ளது.
வலதுப் பக்க டயர் கழன்று விற்ற நிலையிலும், தாமான் வெலோக்சில் (Taman Velox) உள்ள சாலையில் அக்கார் படு வேகமானச் சென்றது, Han Amin எனும் பயனர் பதிவேற்றிய 18 வினாடி வீடியோவில் தெரிகிறது.
அந்த Honda CRV காரை நிறுத்த மற்ற சில வாகனங்கள் முயற்சித்த போதும், அதன் ஓட்டுநர் கண்டு கொள்ளாமல் போய்க் கொண்டிருந்தார்.
அதுவும், சாலையில் தீப்பொறி கிளம்பும் அளவுக்கு அந்த மோட்டார் சைக்கிளை அக்கார் இழுத்துச் சென்றது பார்ப்போரை பதற வைத்தது.
உணவு அனுப்பும் சேவையில் ஈடுபடுபவர் எனக் கூறப்படும் மோட்டார் சைக்கிளோட்டி, காரால் மோதப்பட்ட வேகத்தில் சாலையில் குதித்து உயர் தப்பினார்.
Honda CRV காரோட்டி மதுபோதையிலிருந்தாக தெரிய வருவதாக வீடியோவைப் பதிவேற்றியவர் குறிப்பிட்டார்.
ஒருவேளை அந்த காரோட்டி உண்மையிலேயே மதுபோதையிலிருந்தது உறுதியானால், அவர் மீது போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வீடியோவைப் பார்த்த பெரும்பாலான நெட்டிசன்கள் வலியுறுத்தினர்.