
கோலாலாம்பூர், ஏப்ரல்-16-பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் Ikatan Prihatin Rakyat (IPR) கட்சிகளை இணைப்பது குறித்து லூமுட் நாடாளுமன்ற உறுப்பினர் நோர்டின் அஹ்மாட் இஸ்மாயில் முன்வைத்த விமர்சனத்திற்கு, உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr பி. ராமசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
IPR கூட்டணியில் உள்ள உரிமைக் கட்சி மற்றும் பி. வேதமூர்த்தியின் MAP கட்சி உள்ளிட்டவற்றை பெரிக்காத்தான் கூட்டணிக்குள் கொண்டு வர தான் ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெர்சாத்து அழுத்தம் கொடுப்பதாகவும், அப்படி அவை உள்ளே நுழைந்தால் கணினிகளைத் தாக்கும் Trojan Horse வைரஸ் கிருமிகளைப் போலச் செயல்படும் என நோர்டின் எச்சரித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த ராமசாமி, பெர்சாத்து கட்சிக்குள் முஹிடின் தலைமைக்குச் எதிராகச் செயல்படும் நோர்டின் போன்றவர்களே, உள்ளுக்குள் மறைந்திருக்கும் உண்மையான வைரஸ் என சாடினார்.
இந்த நோர்டின், பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்ட டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடினின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தங்கள் சொந்தக் கட்சித் தலைவரையே முதுகில் குத்துபவர்கள், மற்றவர்களை எப்படிக் குறை கூற முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ள ராமசாமி, IPR கட்சிகள் பெரிக்காத்தான் நேஷனலில் இணையத் துடிக்கவில்லை என்றும், முஹிடின் தலைமையிலான IPR கூட்டணியில் நீடிக்கவே விரும்புவதாகவும் தெரிவித்தார்.
முஸ்லீம் அல்லாதோர் உரிமைகள் குறித்து பாஸ் கட்சி சமரசம் செய்து கொள்ளாத வரை, அதன் தலைமையிலான பெரிக்காத்தான் கூட்டணியில் இணைவது கடினம் என்றும் ராமசாமி குறிப்பிட்டார்.



